மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2 நாள் அரசுமுறைப் பயணமாக சௌதி அரேபியாவுக்கு நாளை செல்கிறார்.
2 நாள் அரசுமுறைப் பயணமாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, நாளை (7-ம் தேதி) சௌதி அரேபியாவுக்குச் செல்கிறார். அவருடன், வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் வி.முரளீதரனும் செல்கிறார்.
இந்த பயணத்தின்போது, சௌதி அரேபியாவின் ஜெட்டாவில் இரு தரப்பு ஹஜ் ஒப்பந்தம் 2024-ல் கையெழுத்திடுவதற்கும், பரிமாற்றம் செய்வதற்கும் ஒரு தூதுக் குழுவை ஸ்மிருதி இரானி வழிநடத்துவார்.
மேலும், அமைச்சர் இரானி மற்றும் சௌதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார அமைச்சர் ஹெச்.இ.டாக்டர். தவ்ஃபிக் பின் ஃபவ்ஸான் அல் ரபியாவுடன், இரு நாட்டு நலன்கள் குறித்து பரஸ்பர விவாதங்கள் நடக்கும்.
அதோடு, 2024-ல் வரவிருக்கும் ஹஜ் தொடர்பான பிரச்சனைகளில் இரு தலைவர்களும் கவனம் செலுத்துவார்கள். தவிர, தூதுக்குழு இந்திய வணிக சமூகம் மற்றும் சௌதி அரேபியாவில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோருடன் கலந்துரையாடி, வலுவான உறவுகளை வளர்க்கும்.
ஜனவரி 8-ம் தேதி, சௌதி ஹஜ் மற்றும் உம்ரா விவகார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ‘ஹஜ் மற்றும் உம்ரா மாநாட்டின்’ 3-வது பதிப்பின் தொடக்க விழாவில் ஸ்மிருதி இரானி கலந்து கொள்கிறார்.
சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் நீடித்த ஈடுபாட்டால் நெருக்கமாகி இருக்கும் இந்தியா- சௌதி கூட்டாண்மை, இந்த விஜயத்தின்போது மேலும் பலப்படுத்தப்படும். மேலும், ஹஜ் யாத்திரையின் மூலோபாய முக்கியத்துவம், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் முக்கியப் பரிமாணமாக இருக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையே வளர்ந்து வரும் இராஜதந்திர உறவுகளுக்கு சான்றாகவும், பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் உறுதிப்பாட்டையும் இந்த பயணம் மீண்டும் உறுதிப்படுத்தும்.