ஹமாஸ் அமைப்பின் 2-ம் நிலைத் தலைவரைக் கொன்றதற்கு பழிக்குப்பழியாக, இஸ்ரேல் மீது 60 ஏவுகணைகளை ஹிஸ்புல்லா அமைப்பு ஏவி இருக்கிறது.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது ஒரே நேரத்தில் 5,000 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, அப்பாவி மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.
இத்தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேல் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது. இத்தாக்குதல் இன்று வரை நீடித்து வருகிறது. இஸ்ரேலின் அசுரத் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் கிடக்கிறது.
இந்தப் போரில், லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, இஸ்ரேல் மீது தாக்குதலும் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
3 மாதங்களாகத் தொடரும் இத்தாக்குதல்களில் லெபனான் நாட்டைச் சேர்ந்த 129 ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் உட்பட 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 3 பத்திரிகையாளர்களும் அடங்கம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் லெபனானின் பெய்ரூட் நகர் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவரான ஷேக் சலே அல் அரூரி கொல்லப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹாஸன் நஸ்ரல்லா, விரைவில் இதற்கான பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில்தான், இன்று காலை இஸ்ரேல் நாட்டின் மீது அடுத்தடுத்து 60 ஏவுகணைகளை ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஏவி இருக்கிறார்கள். இது தொடர்பாக ஹிஸ்புல்லா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சிறந்த தலைவரான ஷேக் சலே அல் அரூரியைக் கொலை செய்த குற்றத்திற்காக விரைவில் பதிலடி கொடுக்க உள்ளோம்.
இதில் முதன்மைத் தாக்குதலாக, இஸ்ரேலின் மெரோன் வான் கட்டுப்பாட்டு தளத்தைக் குறிவைத்து 62 பலவகைப்பட்ட ராக்கெட்டுகளை ஏவி இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறது.