மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, 300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில், கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கின்ஷாசா நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் அதி கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து, பெய்த கனமழையால், நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ளம் ஆயிரக்கணக்கான வீடுகளை மூழ்கடித்தது. சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து சென்றது. பல இடங்களில் சாலைகள் மற்றும் தரைப்பாலங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும், வாகனங்கள், கால்நடைகள் ஆகியவை வெள்ள நீரில் இழுத்து செல்லப்பட்டன.
கனமழை மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து, கின்ஷாசா நகரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
காங்கோவில் பெய்த கனமழையால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், 43 ஆயிரத்து 750 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.