அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் 15 அடி உயர அணில் சிலையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார். இந்த சிலை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள இராம பக்தர்கள் தங்களால் இயன்றவற்றை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அந்த வகையில், குஜராத் தொழிலதிபர் ஒருவர், அமெரிக்க வைரக்கற்கள் பதித்த அயோத்தி கோவில் வடிவிலான நெக்லஸை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்.
அதேபோல, குஜராத்தைச் சேர்ந்த மற்றொரு பக்தர் 108 அடி நீளமுள்ள அகர்பத்தியை வழங்கி இருக்கிறார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு பக்தர் 400 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட பூட்டை வழங்கி இருக்கிறார். இப்படி பலரும் தங்களால் முடிந்த பொருட்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் 15 அடி உயர அணில் சிலையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார். பெங்களூரு நாகசந்திரா மெட்ரோ இரயில் நிலையம் அருகே பிரபல இன்ஜினீயரிங் நிறுவனத்தை நடத்தி வருபவர் சி.பிரகாஷ்.
தொழிலதிபரான இவர், அயோத்தி இராமர் கோவில் திறப்பையொட்டி, இராமருக்கு உதவிய அணிலை நினைவுகூரும் வகையில் அணில் சிலையை காணிக்கையாக வழங்க முடிவு செய்தார். இதையடுத்து, 15 அடி உயரம், 7½ அடி அகலத்தில் அணில் சிலை வடிவமைக்கும் பணியை கல்யாண் ரத்தோட் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.
இந்தச் சிலை 2½ டன் கார்ட்போர்டு ஸ்டீலால் வடிவமைக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், அணில் சிலை முழு வடிவம் பெற்றதைத் தொடர்ந்து, நாகசந்திராவில் இருந்து ராட்சத லாரி மூலம் அணில் சிலை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில், தொழிலதிபர் சி.பிரகாஷ், அவரது மனைவி பாரதி, சிலை வடிவமைப்பாளர் கல்யாண் ரத்தோட் மற்றும் இந்து அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தொழிலதிபர் சி.பிரகாஷ் கூறுகையில், “அணில் சிலை வரும் 11-ம் தேதி அயோத்தியை சென்றடையும். இந்த சிலை அயோத்தி தாம் இரயில் நிலையத்தின் முன்பகுதியில் வரும் 12-ம் தேதி நிறுவப்பட உள்ளது. இதற்கு இரயில்வே துறையும் அனுமதி வழங்கி இருக்கிறது” என்றார்.
இதுதொடர்பாக அணில் சிலையை உருவாக்கிய கல்யாண் ரத்தோட் கூறுகையில், “இந்த அணில் சிலையை முதலில் காகிதத்தில் உருவாக்கினோம். பிறகுதான், கார்ட் போர்டு ஸ்டீலால் சிலையை உருவாக்க முடிந்தது.
100 ஆண்டுகள் ஆனாலும் எந்த சூழ்நிலையிலும் இந்த அணில் சிலை சேதமடையாமல் இருக்கும். முதலில் அட்டைப் பெட்டியால் அணில் சிலையை உருவாக்கி பின்னர் ஸ்டீலால் வடிவமைத்துள்ளோம். இதை பராமரிக்கும் செலவும் குறைவு” என்றார்.