அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், இதன் அருகே 2,200 கோடி ரூபாயில் 1,200 ஏக்கரில் துணை நகரம் அமைக்க உத்தரப் பிரதேச மாநில அரசு முடிவு செய்திருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள இராமஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமான இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அன்றையதினம்தான் ராம் லல்லா சிலையும் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
ஆகவே, கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீராமரை தரிசனம் செய்ய இந்தியா மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று கணிக்கப்படுகிறது. இதன் காரணமாக, அயோத்தி நகரமே மறுசீரமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் மாறி வருகிறது.
முதல்கட்டமாக, அயோத்தியில் இருந்த இரயில் நிலையம் 450 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது. அதேபோல, 1,450 கோடி ரூபாயில் புதிதாக சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டது. இவை இரண்டையும் பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, 15,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதில், 11,100 கோடி ரூபாய் அயோத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 4,600 கோடி ரூபாய் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே, அயோத்தி நகரில் சர்வதேச தரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அயோத்தி நகரம் முழுவதும் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகள், தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக இருக்கும் வகையில் செய்யப்படுகிறது.
குறிப்பாக, அயோத்தியில் உள்ள சாலைகள் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து இணைக்கும் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு புதிய சாலைகள் போடப்பட்டு வருகின்றன. கோவிலுக்கு நேராகச் செல்லும் இராமர் பாதை எனப்படும் மிக நீளமான 13 கி.மீ. நடைபாதை, கடைகள், வீடுகள் என அனைத்தும் புதுப்பொலிவுடன் மாறி வருகின்றன.
நகரம் முழுவதும் ஒரே மாதிரியான வண்ணங்கள், டிசைன்கள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் என அப்பகுதி முழுதும் அலங்கரிக்கப்பட்டு, ஆன்மிக பூமியை கண்முன்னே காட்சிப்படுத்துகின்றன.
மேலும், புதிதாகக் கட்டப்படும் இராமர் கோவிலின் தோற்றம், ஸ்வஸ்திகா சின்னம், இராமரின் சங்கு, சூரியன், வில் அம்பு ஆகிய படங்களுடன் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற வாசகமும், கடைகளின் பெயர் பலகைகள், வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன.
அதோடு, வெவ்வேறு வண்ணங்களில், மாறுபட்ட உருவங்களில் இராமர், சீதை, ஹனுமன் ஆகியோரின் படங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு, பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன. பகவான் ஸ்ரீராமரின் அடையாளங்கள், அவரின் வாழ்க்கையை தொடர்புபடுத்தும் விஷயங்கள் என அனைத்துமே, அயோத்தி நகரில் பார்க்கும் இடமெல்லாம் நிறைந்துள்ளன.
இதனிடையே, அயோத்தியில் 23 பெரிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், 15 புதிய ஹோட்டல்களை கட்டவும், 8 டவுன்ஷிப்களை உருவாக்கவும் மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் தனியார் துறையினர் மட்டும் 4,500 கோடி ரூபாய் முதலீடு செய்கிறார்கள். இவற்றில் சில திட்டங்கள் அடுத்த 2 ஆண்டுகளில் முடிவடைந்து விடும். பெரிய திட்டங்கள் பல்வேறு கட்டங்களாக முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, டவுன்ஷிப் திட்டங்களில் அதிக அளவாக 59,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு திட்டம் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகம் (30,000 ச.மீ.), ஹரியானா (25,000 ச.மீ.), மத்தியப் பிரதேசம் (18,000 ச.மீ.) மற்றும் ஆக்ராவைச் (3,000 ச.மீ.) சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் டவுன்ஷிப்களை உருவாக்க அனுமதி பெற்றிருக்கின்றன.
மேலும், ஹோட்டல்கள், ரிசார்ட்களை கட்டுவதற்காக உத்தரபிரதேசம் மட்டுமல்லாது பிற மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் 1,450 ச.மீ. முதல் 29,000 ச.மீ. வரையிலான நிலங்களை வாங்கியுள்ளன. இதனால், அயோத்தியில் நிலங்களின் விலை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.
இந்த நிலையில்தான், அயோத்தி அருகே துணை நகரம் அமைப்பதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. சுமார் 1,200 ஏக்கரில் 2,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்த துணை நகரத்தை அமைக்க உத்தரப் பிரதேச மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம், அயோத்தி இராமர் கோவிலை உலகளவில் கொண்டு செல்ல மாநில அரசும், மத்திய அரசும் முடிவு செய்திருக்கின்றன.