புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126-ஆக அதிகரித்துள்ளது.
புத்தாண்டு தினத்தன்று ஜப்பானின் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது. 90 நிமிடங்களில் 21 முறை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து, 150-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால், ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள இஷிகாவா, நிகாட்டா, டயோமா, உள்ளிட்ட மாகாணங்களின் பல்வேறு பகுதிகள் குலுங்கின. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் இரண்டாக பிளந்தன. அதைத் தொடர்ந்து சுனாமி அலைகளும் சில பகுதிகளைத் தாக்கியது.
கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 126 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார், 210 பேர் மாயமாகி உள்ளனர். தொடர்ந்து, மீட்புப் பணிகள் நடந்து வருவதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஜப்பானில் பெய்து வரும் கடும் பனி பொழிவால், மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.