அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இரு பெண்கள் அயோத்தியில் இருந்து காசிக்கு இராமஜோதியை எடுத்து வருகின்றனர்.
அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இராம பக்தர்கள் பலரும், வைர நெக்லஸ், தங்க காலணிகள், பூட்டு, அகர்பத்தி என தங்களால் இயன்ற காணிக்கைகளை வழங்கி வருகின்றனர். அதோடு, நேபாளில் இருந்து சீதா தேவிக்கு சீர்வரிசை பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
எல்லாவற்றும் மேலாக, இஸ்லாமியர்கள் பலரும் இராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்காக நன்கொடை வழங்குவதோடு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகின்றனர். அந்த வகையில், இஸ்லாமிய பெண்கள் இருவர் அயோத்தியில் இருந்து காசிக்கு இராமஜோதியை எடுத்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நஸ்னீன் அன்சாரி, நஜ்மா பர்வீன் ஆகியோர்தான், ‛கடவுள் இராமர் நமது முன்னோர். இந்தியர்களின் டி.என்.ஏ.வும் ஒன்றுதான்’ என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இராமஜோதியை எடுத்து வருகின்றனர்.
இதற்காக இருவரும் இன்று அயோத்தி சென்றிருக்கிறார்கள். இவர்களின் பயணத்தை பாடல்புரி மடத்தின் தலைவர் பாலக்தாஸ் மற்றும் ஓம் சவுத்ரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இராமஜோதியை நஸ்னீன் அன்சாரி மற்றும் நஜ்மா பர்வீன் ஆகியோரிடம் ஷம்பு தேச்சாரியார் ஒப்படைத்தார்.
இருவரும் இராமஜோதியுடன் நாளை காசியை வந்தடைகின்றனர். வரும்போது அயோத்தி மண் மற்றும் சரயு நதியின் புனித நீரையும் எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து “ராமபந்த்” அமைப்பின் தலைவர் ராஜிவ் ஸ்ரீகுருஜி கூறுகையில், “நஸ்னீன் அன்சாரி, நஜ்மா பர்வீன் ஆகியோர் அயோத்தியில் இருந்து இராமஜோதியை கொண்டு வருவார்கள். ஜவுன்பூர் முதல் வாரணாசி வரை, பல்வேறு இடங்களில் இராமஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். நாளை, சுபாஷ் பவன் என்ற இடத்தில் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இராமஜோதியை வரவேற்பார்கள்” என்றார்.