பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு சீர் வரும். இந்த பழக்கம் எப்படி வந்தது என்பது தொடர்பாக சற்று விரிவாக பார்ப்போம்.
தமிழர்களின் ஒவ்வொரு விழா, சடங்குக்குப் பின்னணியிலும் பாரம்பரியமும், வரலாறும் இணைந்து இருக்கும். அவற்றில் ஒன்றுதான் பொங்கல் பண்டிகை. அக்காலத்தில் உழவுக்கு உதவி செய்த இயற்கை, காளைகள் என அனைவருக்கும் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தமிழர்களின் முதன்மையான திருநாளாக திகழ்ந்து வருகிறது.
புத்தாடை அணிந்து பொங்கல் சமைத்து செங்கரும்பு சுவைத்து, உற்றார் உறவினரோடு கூடுவது தனி இன்பம் தான்.
அதுவும் புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு பொங்கல் பண்டிகை என்றால் தனி குஷிதான். உலகிலேயே உயர்வான சொந்தமாக கருதப்படுவது ரத்த சொந்தம் தான்.ஆம். தாய் வீட்டில் இருந்து வரும் சீர் எப்போதுமே உயர்வானது தான். தாய்வழி உறவில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவ்து பொங்கல் சீர்வரிசை தான்.
திருமணமாகிச் சென்ற பெண்கள், கணவரின் வீட்டில் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடத் தேவையான அத்தனை பொருள்களையும் தாய் வீட்டில் இருந்து சீர்வரிசையாக அனுப்பி வைக்கும் வழக்கம் தமிழரிடத்தில் பாரம்பரியமாக இருந்து வருகிறது.
சில குடும்பங்களில் திருமணமான முதல் ஆண்டு கொண்டாடும் தலைப்பொங்கலுக்கு மட்டும் சீர் வரிசை தருவார்கள். ஆனால் சில குடும்பங்களில் ஆண்டுதோறும் சீர்வரிசை அளிப்பார்கள். தாய், தந்தை மறைந்தாலும் பாசமலரை மறக்காத உடன்பிறப்புக்கள் ஆண்டுதோறும் சீர்வரிசை அளித்து பிறந்த வீட்டு கௌரவத்தை நிலைநாட்டுவார்கள். பொங்கல் சீர் என்பதில் பிறந்த வீட்டின் கௌரவம் அடங்கியுள்ளதாக பரவலாக நம்பப்படுகிறது.
அந்த காலத்தில் கட்டுக்கட்டாய் கரும்புகள், மூட்டை மூட்டையாய் பச்சரிசி, வெல்லம், உப்பு, மஞ்சள், காய்கறிகள், வாழைத்தார், மண்பானைகள், புத்தாடைகள் மற்றும் பொங்கல் வைப்பதற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் தலைச்சுமையாய் நடந்து சென்றோ, குதிரை மற்றும் மாட்டு வண்டிகளில் கொண்டு சென்றோ மகளின் வீட்டில் பெற்றோர் அளித்து வந்தனர்.
குழந்தை பிறந்தால் பயன்படுமே என்பதற்காக கறவை மாடுகளையும் சிலர் சீராகக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது காலம் மாறி வருகிறது.
இவ்வளவு பொருள்களையும் கொண்டு சென்றால் எங்கு வைப்பது, யாரிடம் கொடுப்பது. அதற்குப் பதிலாக சீர் கொடுக்க ஆகும் செலவை அப்படியே பணமாகக் கொடுத்து விடுங்கள். தேவையானவற்றை நாங்களே வாங்கிக் கொள்கிறோம்’ என மகளோ, மருமகன் குடும்பத்தினரோ கேட்டுப் பெறும் நிலை உருவாகிவிட்டது. எனவே பணமாக கொடுக்கும் பழக்கம் பெருகி வருகிறது.
ஆனால் கிராமப்புறங்களில் இந்த வழக்கம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தொட்டுத் தொடரும் பந்தமாய் நீடித்து வரும் தமிழர்களின் பண்பாட்டு கலாச்சார நிகழ்வை எண்ணி பெருமை கொள்வோம். பொங்கலோ பொங்கல் என கொண்டாடி மகிழ்வோம். வாழ்க தமிழ், வளர்க நமது கலாச்சாரம்.