பங்களாதேஷ் பொதுத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை விடுதலை செய்யக்கோரி பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.
அண்டை நாடான பங்களாதேஷில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனாவே மீண்டும் வெற்றி பெற்று, தொடர்ந்து 4-வது முறையாக பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு வீட்டுக் காவலில் இருக்கும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சி (பி.என்.பி.), ஒரு நடுநிலை அரசை நிறுவிய பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.
இதற்கு ஆளும் கட்சி மறுப்புத் தெரிவித்ததால், 48 மணி நேர தேர்தல் புறக்கணிப்புக்கு நேற்று அழைப்பு விடுத்தது. இதையடுத்து, கலீதா ஜியாவின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் நேற்று முதல் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிட்டகாங், காசிபூர் நகரில் வாக்குச்சாவடி மையங்களாக அமைக்கப்பட்டிருந்த 5 பள்ளிக் கூடங்களுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். கடந்த 16 மணி நேரத்தில் 4-க்கும் மேற்பட்ட தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறியதாக தீயணைப்புத்துறை தெரிவித்திருக்கிறது.
முன்னதாக, ஜெஸ்ஸோர் – டாக்கா பெனாபோல் விரைவு இரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர். எனினும், வன்முறையையும் மீறி பங்களாதேஷில் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, பொதுத்தேர்தல் நடைபெறும் சூழலில், தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செயலி செயலிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, தேர்தல் நடைபெறும் நாளில் வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் மையங்களைக் கண்டறிய இந்த செயலியைப் பயன்படுத்தலாம் என்று தேர்தல் கமிஷன் செயலாளர் ஜஹாங்கீர் ஆலம் அறிவித்திருந்தார்.
ஆனால், இன்று வாக்குச் சாவடி மையங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான விவரங்களைக் கண்டறிய வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய Tk21 கோடி செயலி, நேற்று முதல் வேலை செய்யவில்லை.
நேற்று மாலையில் இருந்து பலமுறை முயற்சித்தபோதும், செயலியை அணுக முடியவில்லை என்று வாக்காளர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் சிஸ்டம் மேலாளர் அஷ்ரப் ஹொசைன், செயலியை அணுகுவதில் உள்ள சிக்கல் தற்காலிகமானது.
இது விரைவில் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயலியை அணுக முடியாததற்கு, ஒரே நேரத்தில் பலரும் பயன்படுத்த முயன்றது கூடக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க, இன்று பொதுத்தேர்தலில் வாக்களித்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்தியா நமது நம்பகமான நண்பன். எங்கள் விடுதலைப் போரின்போது, அவர்கள் எங்களுக்கு ஆதரவளித்தனர்.
1975-ம் ஆண்டுக்குப் பிறகு, நாங்கள் எங்கள் முழு குடும்பத்தையும் இழந்தபோது, அவர்கள் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். இந்திய மக்களுக்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார்.