அயோத்தி ஸ்ரீ இராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருவாரூரில் மேளம் தாளம் வாத்தியங்கள் முழங்க பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
பாரதத்தின் ஆன்மீக கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கும் அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி 22 அன்று நடைபெறவுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, வரும் 22ம் தேதி அன்று பிரதமர் கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.
பகவான் ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளிப் பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவர் இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் நாதஸ்வரம், மேளதாளம், மங்கள வாத்தியம் முழங்க அயோத்தி ஶ்ரீராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.