அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக மாரத்தான் வீரர் கார்த்திக் ஜோஷ் இந்தூரில் இருந்து அயோத்தி வரை 1008 கி.மீ தனது மாரத்தான் ஓட்டத்தை தொடங்கியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக 22 வயதான இந்திய அல்ட்ரா மாரத்தான் வீரர் கார்த்திக் ஜோஷி மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இருந்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி வரை 1008 கி.மீ மாரத்தானில் ஈடுபட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை தொடங்கிய இவரது பயணம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது. மொத்தமாக 14 நாட்களில் அயோத்தியை அடைய திட்டமிட்டுள்ளார். மத்திய பிரதேச அமைச்சர் கைலாஷ் மற்றும் இந்தூர் மேயர் புஷ்யமித்ர பார்கவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த மாரத்தான் ஓட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து பேசிய கார்த்திக் ஜோஷி, ” ராமர் 14 ஆண்டுகள் வனவாசத்தில் இருந்தார். எனவே, நான் இந்தூரில் இருந்து அயோத்தி வரையிலான எனது பயணத்தை 14 நாட்களில் முடிக்கவுள்ளேன் ” என கூறினார்.
மேலும் இவர் தினசரி 72 கி.மீ தூரத்தை கடக்கவுள்ளார். அதேபோல் இவருடன் 7 பேர் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் செல்கிறது. இந்தூரிலிருந்து அயோத்திக்கு செல்லும் சாலை தூரம் தோராயமாக 945 கிலோ மீட்டர்கள் தான்.
ஆனால் தான் போகும் பாதையை மாற்றி 1008 கி.மீ வரும்படி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். ஏனெனில் 1008 என்பது மங்களகரமான எண்ணாக கருதப்படுகிறது.