இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாட வேண்டும் என்று கங்குலி கூறியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாடாமல் இருந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையில் அவர்கள் விளையாட மாட்டார்கள் என்று தகவல் வந்தது. ஆனால் டி20 போட்டிகளில் விளையாட தாங்கள் தயாராக இருப்பதாக பிசிசிஐயிடம் ரோஹித் மற்றும் கோலி கூறியிருந்தனர்.
இதன் காரணமாக வரும் 11ஆம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரிலேயே அவர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலி விளையாடுவாரா? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரரான சவுரவ் கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இது தொடர்பாக கங்குலி பேசுகையில், “இந்திய அணி ஒரு சிறந்த அணி. நமது அணி தோற்றால், உடனே குறை கூற ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் வெற்றியை யாரும் பெரிய அளவில் கொண்டாடுவதில்லை. என்னை பொறுத்தவரை இந்தியா மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் முக்கிய வெற்றிகள் அதிர்ஷ்டம் இல்லாமல் தவறவிடப்படுகிறது.
அந்த வகையில் எதிர்வரும் டி20 உலகக் கோப்பையை பொறுத்தவரை இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்ல தகுதியான ஒரு அணி. அதோடு இந்த டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்த வேண்டும். அதேபோன்று விராட் கோலியும் அந்த தொடரில் இடம்பிடித்து விளையாட வேண்டும்” என்று கூறியுள்ளார்.