பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து விமர்சனம் செய்திருந்த மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார். அப்போது, பிரதமர் மோடி, காலை நேரத்தில் லட்சத்தீவு கடற்கரையில் வாக்கிங் சென்றார். மேலும், ஸ்நோர்கெலிங் செய்து மகிழ்ந்தார்.
இதன் பிறகு, டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, லட்சத்தீவின் சிறப்பு அம்சங்கள் குறித்தும், தனது பயண அனுபவங்கள் குறித்தும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அப்பதிவில், “லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல.
காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு. மேலும், இது மக்களுக்கான சான்று. ஆகவே, இந்திய மக்கள் அனைவரும் லட்சத்தீவுக்கு ஒரு முறையேனும் பயணம் மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.
பிரதமரின் இந்தப் பதிவு குறித்து, மாலத்தீவை ஆட்சி செய்து வரும் பி.பி.எம். கட்சியின் கவுன்சில் உறுப்பினர் ஜாஹித் ரமீஸ், தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த நடவடிக்கை என்பது பெரியதுதான். எனினும், எங்களுடன் போட்டியிடுவது என்பது ஒரு மாயை போன்றது.
ஏனென்றால் நாங்கள் வழங்கும் ஆபர்களைபோல் அவர்கள் எப்படி வழங்க முடியும்? எப்படி சுத்தமாக இருக்க முடியும்? மேலும், அறைகளில் இருந்து நிரந்தரமாக வரும் கெட்ட நறுமணம் பெரிய பின்னடைவாக இருக்கும்” என்று இந்தியர்களை கேலி செய்தும், இனவெறியைக் காட்டும் வகையிலும் பதிவிட்டிருந்தார்.
மேலும், மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது. கடற்கரை சுற்றுலாவில் மாலத்தீவுடனான போட்டியில் இந்தியா பல சவால்களை சந்திக்க வேண்டியதிருக்கும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்திருந்தார்.
அதேபோல, மாலத்தீவு அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மால்ஷா ஷரீப் மற்றும் ஹாசன் சிகான் ஆகியோரும் பிரதமர் மோடியின் பயணம் குறித்து கேலி, கிண்டல் செய்யும் விதமாக கருத்துப் பதிவிட்டிருந்தனர். மாலத்தீவு அமைச்சர்களின் இப்பதிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பிரதமர் மோடி குறித்த விமர்சனத்துக்கு, மாலத்தீவு முன்னாள் பிரதமர் முகமது நஷீத் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதோடு, இந்தியா நமது நெருங்கிய நண்பர் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, அமைச்சர்கள் கூறியது அவர்களது தனிப்பட்ட கருத்து என்றும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாலத்தீவு அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் இந்தியர்கள் குறித்து விமர்சன பதிவுகளை வெளியிட்ட மரியம் ஷியூனா, மால்ஷா ஷரீப் மற்றும் ஹாசன் சிகான் ஆகிய 3 அமைச்சர்களையும் சஸ்பெண்ட் செய்து மாலத்தீவு அரசு அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.