திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றி விட்டேன் என்று கூறும் முதலமைச்சர், பென்னாகரம் தொகுதிக்குக் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை சேலம் மேற்கு, பென்னாகரம் தொகுதியில், நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
பல நூற்றாண்டுகளாக சிறப்பாக விவசாயம் நடைபெற்றதற்கான சான்றாக, ஏர் கலப்பை பொறிக்கப்பட்ட நடுகல் கிடைத்தது பென்னாகரத்தின் தொன்மையை எடுத்துக்காட்டுகிறது.
விவசாயத்துக்குப் பெயர்போன பென்னாகரம் பகுதியில் சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் பயிரிடப்படுகின்றன. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், ஐநா சபை மூலம் 2023 ஆம் ஆண்டை, உலக சிறுதானிய ஆண்டாக அறிவித்து, உலக அளவில் சிறுதானியங்களின் பெருமையை எடுத்துச் சென்றுள்ளார். இதனால் சிறு தானியங்களின் விற்பனை 30% அதிகரித்துள்ளது.
மேலும், டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டில், உலகத் தலைவர்கள் அனைவரையும் சிறுதானிய உணவுகளைக் கொண்டு உபசரித்தார். வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததும், நாடு முழுவதும் நதி நீர் இணைப்பு செயல்படுத்தப்பட்டு, தர்மபுரியில் 40,000 ஏக்கர் பரப்பளவில் சிறுதானிய விவசாயம் நடைபெறும்.
மேலும், தர்மபுரி பாராளுமன்றத் தொகுதியில், பாஜக பாராளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தால், இன்று தமிழகத்தில் கடைசி வரிசையில் இருக்கும் தர்மபுரி மாவட்டம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், முதலிடங்களில் வரும் என்று தமிழக பாஜக உறுதி பூண்டுள்ளது.
வ.உ.சிதம்பரம் பிள்ளை மற்றும் பாரதியாரின் உற்ற தோழனாக விளங்கி, தன் பேச்சுக்கள் மூலம் சுதந்திரப்பற்றை இளைஞர்களுக்கு ஊட்டி, அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைந்து தேச விடுதலைக்காகப் போராடிய தியாகி சுப்பிரமணிய சிவா, தனது இறுதி நாட்களை இந்த பகுதியில் தான் செலவிட்டார்.
பென்னாகரம் பாப்பாரபட்டியில் பாரதமாதா கோவில் அமைக்க வேண்டும் என்பது இவரின் லட்சியம். பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்ரமணிய சிவா அவர்களின் நினைவு மண்டபமும், பாரத மாதா கோவிலையும் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின அமுத பெருவிழாவின் போது பூட்டி வைத்தது தேசவிரோத திமுக அரசு. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பெரிய அளவிலான பாரதமாதா கோவில் மற்றும் சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபம் அமைக்கப்படும்.
தமிழகத்தில் அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி இருக்கிறது என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பென்னாகரம் அருகே உள்ள அலக்கட்டுமலை, கோட்டூர்மலை, ஏரிமலை போன்ற கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. கழுதைகளைக் கொண்டுதான் அத்தியாவசிய பொருட்கள் மலை ஏற்றப்படுகின்றன. நமது பிரதமர், கிராம சாலை திட்டத்திற்கு கொடுத்த நிதி என்ன ஆனது என்று தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் கூறுவாரா.
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றி விட்டேன் என்று கூறும் முதலமைச்சர், பென்னாகரம் தொகுதிக்குக் கொடுத்த வாக்குறுதிகளான ஓகேனக்கல் நீர் மின் உற்பத்தித் திட்டம், அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தல், பாப்பாரப்பட்டியில் அரசு கூட்டுறவு சங்கங்கள், பெண்ணாகரத்தில் குளிர்பதனக் கிடங்குகள், ஓகேனக்கல் காவிரி ஆற்றில் உபரி நீரைத் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பி விவசாயப் பாசன வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் என ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக கூட்டணியை, தமிழக மக்கள் தூக்கியெறிய வேண்டும். தமிழகத்தையும் நாட்டையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி
மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்க, தமிழகமும் துணை நிற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.