சபரிமலை ஐயப்பன் கோவில் மகர ஜோதியின் போது, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ஆன்லைன், ஸ்பாட் புக்கிங் செய்ய கட்டுப்பாடு விதிக்கக்பபட்டுள்ளது.
மகர சங்கராந்தி நாளில், சூரியன் மறைவுக்குப் பின்பு பொன்னம்பல மேட்டில் பேரொளி ஒன்று தோன்றி மறைகிறது. சபரிமலையில் இருந்து இந்தப் பேரொளியைக் காணும் பக்தர்கள், பொன்னம்பல மேட்டில் இருக்கும் ஐயப்பனே, ஜோதி வடிவில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பதாக நம்புகின்றனர்.
இந்நிலையில், மகர ஜோதி தரிசனம் 15ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி ஜன.,13-ஆம் தேதி பந்தளத்தில் இருந்து திருவாபரணப் பவனி புறப்படுகிறது. பரிமலையில் மகரஜோதி நாளில் நடைபெறும் மகர சங்கரம பூஜை 15 அதிகாலை 2:40 -க்கு நடைபெறும். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் முகூர்த்தத்தில் இந்த பூஜை நடைபெறும்.
இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொடுத்துவிடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு நேரடியாக ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இதற்காக சபரிமலை நடை அன்று அதிகாலை 2:20 மணிக்கு திறக்கப்படும்.
மகர சங்கரம பூஜை முடிந்த பின் பக்தர்கள் தரிசனம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளும் நடைபெறும். ஜன.,15 மாலை 5:30 -க்கு திருவாபரணம் சரங்குத்தி வந்ததும் தேவசம்போர்டு ஊழியர்கள் வரவேற்று பவனியை அழைத்து வருவர்.
6:30 -க்கு சன்னதி முன்பு தந்திரியும் மேல் சாந்தியும் திருவாபரண பெட்டியை வாங்கி மூலவருக்கு ஆபரணங்களை அணிவித்து தீபாராதனை நடத்துவர்.இந்த நேரத்தில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதியும், மகர நட்சத்திரமும் பக்தர்களுக்கு காட்சி தரும்.ஜோதி நாளில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க ஆன்லைன் முன்பதிவு குறைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் ஸ்பாட் புக்கிங் ரத்து செய்யப்படவுள்ளது.