வங்காளதேசத்தில் ரோகிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து நாசமானது.
காக்ஸ் பஜார் என்ற எல்லை பகுதியையொட்டிய மாவட்டத்தில் இலட்சக்கணக்கான ரோகிங்கியா முஸ்லீம்கள் அகதிகளாக தங்கி உள்ளனர்.
இந்நிலையில், ரோகிங்கியா அகதிகள் முகாம் 5-ல் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தீ மளமளவென பரவி மற்ற கூடாரங்களுக்கும் பரவியது.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்புத் துறையினருடன் தன்னார்வலர்களும் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில், 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து நாசமானது. இதனால், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர்.
மேலும், கல்வி மையங்கள், மசூதிகள் மற்றும் சுகாதார நல மையங்களும் சேதமடைந்துள்ளன. ரோகிங்கியா சமூக மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில், 2 ஆயிரத்து 800 கூடாரங்கள் எரிந்து நாசமானது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்தனர்.