வடகொரியா தனது மேற்கு கடற்கரை பகுதியில் இருந்து, தென்கொரியாவை நோக்கி 90 பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகளை விதித்த போதிலும், வடகொரியா அதைக் கண்டுக் கொள்ளாமல், தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில், வடகொரியா தனது மேற்கு கடற்கரை பகுதியில் இருந்து தென்கொரியாவை நோக்கி 90 பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
தென் கொரியாவின் எல்லைத் தீவான யோன்பியாங் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி நேற்று மாலை, பீரங்கித் தாக்குதல்கள் நடந்ததைக் கண்டறிந்ததாக கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.
வடகொரியாவின் இந்த குண்டுவீச்சு சம்பவத்தில், தென்கொரிய பொதுமக்களுக்கோ அல்லது இராணுவத்திற்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். மேலும், தென்கொரிய இராணுவம் பதில் பயிற்சிகளை நடத்தத் திட்டமிடவில்லை என்று தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை தென்கொரியாவின் யோன்பியாங் தீவுப்பகுதியை நோக்கி, 200-க்கும் மேற்பட்ட குண்டுகளை வடகொரியா வீசி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.