ரஞ்சி கோப்பையில் இரட்டை சத்தம் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் புஜாரா.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89 வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி சௌராஷ்ட்ரா நகரில் துவங்கியது.
இதன் 6வது லீக் போட்டியில் ஜார்க்கண்ட் மற்றும் சௌராஷ்ட்ரா கிரிக்கெட் அணிகள் விளையாடியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜார்கண்ட் அணி 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய சௌராஷ்டிரா அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 578/4 ரன்கள் குவித்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
அந்த அணிக்கு துவக்க வீரர் ஹர்விக் தேசாய் 85 ரன்கள் எடுக்க செல்டன் ஜாக்சன் 54 ரன்கள் குவித்தார். ஆனால் அவர்களை விட நான்காவதாக களமிறங்கி செட்டேஸ்வர் புஜாரா தன்னுடைய மொத்த அனுபவத்தையும் காட்டி 30 பவுண்டரிகளுடன் இரட்டை சதமடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 243 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அதன் வாயிலாக உலக அளவிலான முதல் தர கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்கள் அடித்த 4வது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அத்துடன் முதல் தர கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 4வது இந்திய வீரர் என்ற ஜாம்பவான் லக்ஷ்மண் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் சுனில் கவாஸ்கர் 25834 ரன்களுடன் முதல் இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 25396 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், ராகுல் டிராவிட் , 23794 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், புஜாரா 19813 ரன்களுடன் நான்காவது இடத்திலும், விவிஎஸ் லக்ஷ்மண் 19730 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றனர்.