வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்த இந்திய தூதர் பிரனய் வர்மா, தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு சார்பில் வாழ்த்து தெரிவித்தார்.
வங்கதேச பொதுத்தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. 299 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில்,அக்கட்சி 222 தொகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து ஐந்தாவது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராக பதவியேற்கிறார். இதன் மூலம் உலகின் மிக நீண்ட பெண் பிரதமராக பதவி வகித்த தலைவர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.
இந்நிலையில் வங்கதேசத்திற்கான இந்திய தூதர் பிரனய் வர்மா பிரதமர் ஷேக் ஹசீனாவை நேரில் சந்தித்து பிரதமர் மோடி சார்பில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவாமி லீக் அரசாங்கத்தின் புதிய ஆட்சிக் காலத்தில், இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையிலான இருதரப்பு கூட்டுறவில் மேலும் வலுவான வேகமும் வளர்ச்சியும் இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வங்கதேச மக்களின் நீண்டகால நட்பால் வழிநடத்தப்பட்டு, விடுதலைப் போரில் பங்குபெற்ற தியாகங்களால் ஈர்க்கப்பட்டு, நிலையான, முற்போக்கான மற்றும் வளமான தேசம் என்ற அவர்களின் கனவை நனவாக்குவதற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.