வரும் 22-ம் தேதி நடைபெறும் அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே ஸ்ரீராமர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இந்த விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். ஆகவே, விழா ஏற்பாடுகள் அனைத்தையும் பிரதமர் மோடி மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
மேலும், ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தேசியத் தலைநகர் டெல்லி முழுவதும் உள்ள சுமார் 14,000 கோவில்களிலும் கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்பு திரையிடப்படும் என்று டெல்லி பா.ஜ.க.வின் கோவில் பிரிவு தலைவர் கர்னைல் சிங் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து கர்னைல் சிங் கூறுகையில், “விழாவை நேரலையில் காண ஒவ்வொரு கோவிலிலும் சுமார் 200 பேருக்கு அனுமதி வழங்கப்படும். இந்த நிகழ்வில் மொத்தம் 30 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி கர்னால் சாலையில் உள்ள காது ஷியாம் கோவிலில் ஜனவரி 20-ம் தேதி 1.08 லட்சம் தீபங்கள் ஏற்றப்படும். இராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வைக் குறிக்கும் வகையில், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜனவரி 17-ம் தேதி கோவில் பூசாரிகள் 14,000-க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகன பேரணி செல்ல உள்ளனர்.
அப்போது, டெல்லி முழுவதும் உள்ள வீடுகளுக்குச் சென்று மக்களுக்கு அக்ஷதை விநியோகித்து, அருகில் உள்ள கோவிலில் ஒளிபரப்பப்படும் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரலையைக் காண அழைப்பு விடுப்பார்கள். மேலும், ‘பிரான் பிரதிஷ்டா’ விழா குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக சுமார் 1,000 யூனிபோல் போர்டிங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள இந்திய தூதரகங்கள் மூலமாகவும் கும்பாபிஷேக விழா ஒளிபரப்பப்படும் என்று கூறப்படுகிறது.