2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சோதனை மேல் சோதனை வந்து கொண்டே உள்ளது.
ஐபிஎல் தொடர் என்றாலே சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு தான் போட்டியாக இருக்கும். கடந்த மூன்றாண்டில் சிஎஸ்கே அணி 2 முறை கோப்பையை வென்றது. ஆனால் மும்பை அணி 2 முறை ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை.
இதனால் கேப்டனை மாற்றி சொந்த செலவில் சூனியம் வைத்தது போல் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை நீக்கி ஹர்திக் பாண்டியாவை சேர்த்து இருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெறும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவிக்கு திரும்பி இருப்பது வீரர்கள் மத்தியிலும் வரவேற்கப்படவில்லை. இந்த நிலையில் பும்ரா சூரியகுமார் ஆகியோர் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது சூரிய குமார் யாதவ், ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார். சூரியகுமார் யாதவுக்கு தற்போது ஹெரனியா பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார்.
இதன் காரணமாக 8 முதல் 10 வாரத்திற்கு அவர் முழு ஓய்வில் இருக்கப் போகிறார். அதன் பிறகு அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று தன்னுடைய உடல் தகுதியை மீட்க போகிறார்.
சூரியகுமார் டி20 உலக கோப்பையில் முக்கிய வீரராக திகழ்வதால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என தெரியவில்லை. இதனால் தமது உடல் தகுதி இன்னும் நூறு சதவீதம் பெறவில்லை என்று கூறி ஐபிஎல் தொடரிலிருந்து அவர் விலக அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சூரியகுமார் யாதவ் விளையாடவில்லை என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என தெரிகிறது. சூரியகுமார் மேற்கொள்ள உள்ள இந்த அறுவை சிகிச்சையை கண்காணிக்க பிசிசிஐ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் முடிவெடுத்திருக்கிறது.
சூரியகுமார் யாதவுக்கு முழு உதவியும் பிசிசிஐ வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது. ஐபிஎல் தொடருக்கு முன்பு சூரியகுமார், முழு உடல் தகுதியை பெற்று விட வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.