தனியார் மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கவே நீட் எதிர்ப்பு இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறது திமுக எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
அயோத்தியில் குழந்தை ராமருக்குக் கோவில் எழுவதைப் போலவே, நாளை தமிழகத்தில் பாஜக ஆட்சியில் பாப்பிரெட்டிபட்டி தென்கரைக் கோட்டை ஸ்ரீகல்யாணராமர் கோவிலிலும் பழம்பெருமையுடன் திருப்பணி செய்யப்படும். சுமார் 20,000 ஏக்கர் அளவிற்கு மரவள்ளிக்கிழங்கு சாகுபடி நடை பெறும் விவசாயத்திற்கு பெயர்போன பூமி பாப்பிரெட்டிப்பட்டி. இத்தனை முக்கியமான பூமி, இத்தனை ஆண்டுகளாக ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டே வந்திருக்கிறது.
தமிழகத்தின் மொத்த உள் மாநில உற்பத்தியில் தருமபுரி மாவட்டத்தின் பங்கு வெறும்1.7%. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களின் பங்கு 34%. மாவட்டங்களின் வளர்ச்சி சமமானதாக இல்லை.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஒன்பதாண்டு கால ஆட்சியில், தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகள், ஏர்போர்ட் விரிவாக்க பணிகளுக்கு 4542 கோடி ரூபாய், துறைமுகங்கள் மேம்படுத்த 1 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய், தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்த செலவிட்ட தொகை 43,935 கோடி ரூபாய், மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்த கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி 1910 கோடி ரூபாய், கிராமப்புற சாலைகளை மேம்படுத்த 3376 கோடி ரூபாய், தமிழகத்திற்கு 7 ஆண்டுகளில் வழங்கப்பட்ட முத்ரா கடன் 2.02 லட்ச கோடி ரூபாய், சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் 26,659 கோடி ரூபாய் என மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக தமிழக மக்கள் பெற்ற வேலைவாய்ப்பின் எண்ணிக்கை 1,68,21,206. ஆனால், ஆட்சிக்கு வந்ததும், மூன்று லட்சம் அரசு வேலைகள் தருவோம், ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த 31 மாதங்களில் 20,000 அரசு வேலைகள் கூட இளைஞர்களுக்கு வழங்கவில்லை.
தமிழகத்தில் ஆறாவது முறையாக ஆட்சியில் இருக்கும் திமுக, தமிழகத்துக்குக் கொண்டு வந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை வெறும் ஐந்து மட்டுமே. ஆனால், 17 தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்துள்ளனர்.
திமுகவினர் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு வருமானம் வருவதற்காக மட்டுமே, நீட் தேர்வை திமுக எதிர்க்கிறது. நீட் தேர்வு மூலம் ஏழை எளிய மாணவர்களும் மருத்துவர்கள் ஆகும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் திமுக, பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒன்பதாண்டுகளில் தமிழகத்தில் மருத்துவக் கல்வி இடங்களை இரட்டிப்பாக்கியிருக்கிறார். இதனால், தமிழகத்தில் இருந்து அதிகமான மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பு கிடைத்திருப்பதோடு, மருத்துவக் கல்வி வாய்ப்பு, அனைவருக்கும் சமமாக வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்பதே நமது பிரதமர் அவர்களின் விருப்பம். இதைத் தடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கவே நீட் எதிர்ப்பு இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறது திமுக.
இத்தனை ஆண்டுகளாக, தமிழகத்தில் ஜாதி அரசியல் நடந்து வருகிறது. ஆனால் பாஜக, வளர்ச்சி அரசியலைப் பேசுகிறோம். தொழிற்சாலைகள் உருவாக்குவதைப் பற்றி, இளைஞர்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவதைப் பற்றிப் பேசுகிறோம்.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசிக்கு நமது மத்திய அரசு வழங்கிய நிதி 34,019 கோடி ரூபாய். மாநில அரசின் பங்கு 3189 கோடி ரூபாய்.
ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் ஒரு கிலோ அரிசியின் விலை 34 ரூபாய். 32 ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. 2 ரூபாய் மட்டுமே மாநில அரசின் பங்கு.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக வரக்கூடாது என்று கூறும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், வேறு யாரைப் பிரதமராகக் கொண்டு வர விரும்புகிறார் என்று கூற முடியுமா? மோடிக்கு மாற்றாக, எதிர்க்கட்சிகளில் யாரையுமே கூற முடியாது.
உலக அரங்கில் நமது நாடு பொருளாதாரத்தில் 11 ஆவது இடத்தில் இருந்து 5 ஆவது இடத்துக்கு வந்துள்ளது. நாட்டுக்காக, மக்களுக்காக தொடர்ந்து உழைக்கும் நமது பிரதமரைத் தவிர அந்தப் பொறுப்பில் வேறு யார் அமர முடியும்? வரும் பாராளுமன்றத் தேர்தலில், வளர்ச்சிக்காக, நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கரங்களை வலுப்படுத்துவோம். தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.