அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளன.
இதுதொடர்பாக சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற 2ஆம் கட்ட சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனைத்தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்றும் பேச்சுவார்ததை நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. எனவே இன்று ( 9-ம் தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதனைத்தொடர்ந்து நேற்று மாலையில் இருந்தே பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. அதேபோல் இன்று காலை சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. கிராமப்புறங்களில் மிக குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில், பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள நிலையில், போதிய பேருந்துகள் இயக்கப்படாமல் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பணிகளுக்குச் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தொலைதூர பேருந்தில் வந்தவர்கள் கால் டாக்ஸி, ஆட்டோ மற்றும் வாடகை வாகனத்தில் செல்கின்றனர். மேலும், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக வந்த பயணிகள், போதிய பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்
தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இன்றைய போராட்டத்தில் பங்கேற்று பணிக்கு செல்லவில்லை.
தி.மு.க.வின் தொ.மு.ச., காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கம் மற்றும் தற்காலிக பணியாளர்களை கொண்டு குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.உளுந்தூர்பேட்டையில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.