அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்த உத்தரப்பிரதேச காவல்துறை முடிவு செய்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் உத்தரப்பிரதேச காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு கும்பமேளாவின் போது ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தின் தேவை முதன்முதலில் உணரப்பட்டது. அப்போது விமானம் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத ட்ரோன் பயன்பாடு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தற்போது ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோதி ஆதித்யநாத் ஒப்புதல் வழங்கியுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட ரேடியோ அதிர்வெண்களை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது அவற்றின் கட்டளை நெறிமுறைகளின் அடிப்படையில் தனிப்பட்ட ட்ரோன் மாதிரிகளை அடையாளம் காண்பதன் மூலம் தேவையற்ற ட்ரோன்களைக் கண்டறிந்து இடைமறிக்க முடியும்.
ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தைத் தவிர, பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) கண்காணிப்பை அறிமுகப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. கோவில் வளாகத்திற்குள் அடிக்கடி வருபவர்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான போக்குகளைக் கண்டறிய AI கருவி பயன்படுத்தப்படலாம் என தெரிகிறது.