விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை பயனாளிகளுடன் உரையாடிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பழங்குடியின பகுதிகளில் வசிக்கும் மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதி பூண்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பலன் நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, வளர்ந்த இந்தியா சபத யாத்திரை (விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா) என்கிற திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் மருத்துவக் காப்பீடு, விவசாயிகள் நிதியுதவி திட்டங்களில் இணைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடி வருகிறார்.
அந்த வகையில், இத்திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “சமூகத்தின் கடைசி நபரையும் அரசாங்கமே அணுகி, தனது திட்டங்களுடன் அவரை இணைக்கிறது. மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களால், கடந்த 9 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை எளிதாகி விட்டது.
கிராமமோ அல்லது நகரமோ, விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா தொடர்பாக எல்லா இடங்களிலும் உற்சாகம் காணப்படுகிறது. விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் மிகப் பெரிய நோக்கம், அரசின் எந்தத் திட்டத்தின் பலன்களையும் யாரும் விட்டுவிடக் கூடாது என்பதே.
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா தனது பயணத்தின் 50 நாட்களை 2, 3 நாட்களுக்கு முன்பே முடித்து விட்டது. இந்த யாத்திரையின் மூலம் 11 கோடி மக்கள் அரசின் திட்டங்களுடன் இணைந்திருக்கிறார்கள். விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை அரசாங்கம் மட்டுமல்லாது நாட்டின் பயணமாக மாறியுள்ளது.
முந்தைய தலைமுறையினர் வாழ்ந்த வாழ்க்கையை தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினர் வாழக்கூடாது என்று அரசு விரும்புகிறது. சிறிய அன்றாடத் தேவைகளுக்கான போராட்டத்தில் இருந்து நாட்டு மக்களை விடுவிக்க அரசு விரும்புகிறது.
எனவேதான், ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியவைதான் நாட்டின் 4 பெரிய ஜாதிகள். இவை அதிகாரம் பெற்றால் நாடு சக்திவாய்ந்ததாக மாறும்.
யாத்திரை தொடங்கியதில் இருந்து, சுரக்ஷா பீமா யோஜனா, ஜீவன் ஜோதி யோஜனா, பிரதமர் ஸ்வாநிதி ஆகியவற்றுக்கான லட்சக்கணக்கான விண்ணப்பங்களுடன் உஜ்வாலா இணைப்புகளுக்கான 12 லட்சம் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதுவரை 1 கோடி காசநோய் பரிசோதனைகள், 22 லட்சம் நோய்வாய்ப்பட்ட செல் பரிசோதனைகள் உட்பட 2 கோடிக்கும் அதிகமானோருக்கு சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முந்தைய அரசுகளால் சவாலாகக் கருதப்பட்ட ஏழைகள், தலித்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் வீட்டு வாசலை மருத்துவர்கள் சென்றடைகிறார்கள்.
5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு, ஏழைகளுக்கு இலவச டயாலிசிஸ் மற்றும் ஜன் ஔஷதி கேந்திராக்களில் குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் ஆயுஷ்மான் யோஜ்னா ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், நாட்டில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 10 கோடி பெண்கள் மகளிர் சுயஉதவி குழுக்களில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு 7.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய அரசாங்கங்களில், விவசாயிகள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள புறக்கணிக்கப்பட்டு, நாட்டில் விவசாயக் கொள்கைகள் தொடர்பான விவாதங்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த அரசாங்கம் விவசாயிகளின் அனைத்து சிரமங்களையும் குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது.
பிரதமர் கிசான் சம்மன் நிதி மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் குறைந்தபட்சம் 30,000 ரூபாய் வழங்குதல், முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்கள் பி.ஏ.சி.எஸ்., உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் எஃப்.பி.ஓ. போன்ற அமைப்புகளுடன் விவசாயத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், சேமிப்பு வசதிகள் அதிகரிப்பு மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு ஊக்கமளித்தல் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.
இந்நிகழ்ச்சியில், நாடு முழுவதிலுமிருந்து விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இவர்களில் சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மிசோரம், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பயனாளிகளும் அடங்குவர். இதில், சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்ட கிராமத்தின் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பூமிகா புவராயாவுடன் பிரதமர் மோடி உரையாடினார்.
அப்போது, அந்தப் பெண், “என்னுடைய கிராமத்தில் உள்ள 29 ‘வன் தன்’ சுய உதவிக் குழுக்களில் ஒன்றின் செயலாளராக உள்ளேன். உஜ்வாலா காஸ் இணைப்பு, ஜல் ஜீவன், 100 நாள் வேலை, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி உள்ளிட்ட திட்டங்களால் பயனடைந்துள்ளேன். மேலும், எனது சுய உதவிக் குழு மூலம் மஹ்வா லட்டு மற்றும் நெல்லிக்காய் ஊறுகாய்களை உற்பத்தி செய்து, கிலோ 700 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன்” என்றார்.
இதையடுத்து, அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த பூமிகாவின் விழிப்புணர்வால் ஈர்க்கப்பட்ட பிரதமர், “இது மக்களுக்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது” என்று கூறியவர், “பழங்குடியின பகுதிகளில் வசிக்கும் மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதி பூண்டிருக்கிறது” என்றார்.
அதேபோல, ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், 102 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க கூட்டுறவு குழுமத்தின் உறுப்பினருமான சயீத் க்வாஜா முய்ஹுதீனுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, விவசாயிகள் ஒன்றிணைந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அமைப்பை நடத்துவதற்காக பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.
மேலும், “இப்போதைய அரசின் முயற்சி காரணமாக, வேளாண் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் விளைபொருள் சேமிப்பு கிடங்கு கட்ட நபார்டு எங்கள் குழுமத்துக்கு 3 கோடி ரூபாய் கடன் வழங்கியது. இது விவசாயிகளுக்கு பேருதவியாக உள்ளது” என்று முய்ஹுதீன் தெரிவித்தார். இதுபோல மேலும் பல்வேறு பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் பூபேந்தர் யாதவ், அர்ஜூன் முண்டா, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையில் கலந்து கொண்டனர்.