குஜராத்தில் இருந்து அயோத்தி இராமர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 161 அடி உயரத்தில் 5,000 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான கொடிமரம் அயோத்திக்கு வந்து சேர்ந்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில், 3 அடுக்குகளுடன் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் குழந்தை இராமர் சிலை வரும் 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
அயோத்தி கோவில் எந்தளவுக்கு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறதோ, அதே அளவுக்கு அங்குள்ள ஒவ்வொரு அமைப்பும் பிரம்மாண்டமானதாக அமைக்கப்படுகிறது. அந்த வகையில், கோவிலுக்கு 400 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய பூட்டு, 2,100 கிலோ எடை கொண்ட மணி, 108 அடி நீளமுள்ள அகர்பத்தி என அனைத்தும் பிரம்மாண்டம் காட்டுகின்றன.
இந்த நிலையில், அயோத்தி இராமர் கோவில் கொடி மரமும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதும் உயரமான மரங்கள் தேடப்பட்டன. இறுதியாக, குஜராத் மாநிலத்தில் மரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கொடி மரம் தொடர்பான பணிகள் அகமதாபாத்தில் நடந்து வந்தது.
5,000 கிலோ எடை கொண்ட இந்த கொடி மரத்தி, தங்க முலாம் பூசப்பட்டு, பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், அக்கொடி மரத்தை அயோத்திக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, அந்த பிரம்மாண்ட கொடி மரத்தை குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் கடந்த 5-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த கொடி மரம் பிரம்மாண்டமான லாரியில் ஏற்றப்பட்டு அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த பிரம்மாண்ட கொடி மரம் அயோத்திக்கு வந்து சேர்ந்தது. இந்த கொடி மரத்தை அயோத்தியில் குழுமி இருக்கும் இராம பக்தர்கள் தொட்டு வணங்கி, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டு வரவேற்றனர்.
இந்த கொடி மரம் 44 அடி உயர வெண்கல கம்பத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால், இதன் மொத்த உயரம் 161 அடியாக இருக்கும். மேலும், இந்த கொடி மரம் அயோத்தி கோவிலில் 205 அடி உயரத்தில் மிகவும பிரம்மாண்டமாக நிறுவப்படும் என்கிறார்கள்.