கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டும், அதேபோல வழங்கப்படும் எனப் பொது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், முதலில், பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு ஆகியவைகளை மட்டுமே வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்தது. இதனால், பொதுமக்கள் திமுக அரசு மீது கடும் அதிருப்தி அடைந்தனர். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதால், பெண்கள் மற்றும் பொது மக்களின் ஓட்டு எங்கே தமக்குக் கிடைக்காமல் போய்விடுமோ எனப் பயந்து, அதன் பின்னரே ஆயிரம் ரூபாய் கொடுக்கும் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் தான் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்புச் சமீபத்தில் வெளியானது. அதில், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் ரொக்கம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக, அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்பட உள்ளது.
குறிப்பாக, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசாக ரொக்கம் கிடைக்கும். அதாவது, PHH, PHH-AAY, NPHH ஆகிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிச்சயம் கிடைக்கும்.
மற்றவர்களுக்குப் பொங்கல் பரிசான ஆயிரம் ரூபாய் ரொக்கம் கிடைக்காது. அந்த லிஸ்ட்டில், மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அடக்கம்.
குறிப்பாக, சர்க்கரை ரேஷன் கார்டு வைத்திருப்போர், பொருட்கள் இல்லாத ரேஷன் கார்டு வைத்திருப்போர் ஆகியோருக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் கிடையாது என திமுக அரசு அறிவித்துள்ளது.