அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து கர்நாடகா மாநிலம் சிருங்கேரி சாரதா பீடத்தின் மடாதிபதி தவறாக கூறியதாக பரப்பப்படும் தகவல்களை பக்தர்கள் நம்ப வேண்டாம் என மட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக சிருங்கேரி சாரதா பீடத்தின் மடாதிபதி கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்தது. இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சிருங்கேரி சாரதா பீடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது அனைத்து ஆஸ்திகர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வு. இந்த நேரத்தில், நம் தர்மத்தை விரும்பாத சிலர், சமூக வலைதளம் மூலம் தக்சின்மன்யா சிருங்கேரி சாரதா மடத்தின் பீடாதிபதி, ஜகத்குரு சங்கராச்சார்யா ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிஜி புகைப்படத்துடன், சிருங்கேரி சங்கராச்சாரியா சுவாமிகள், ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக தகவல் பரப்பி உள்ளனர்.
அவர் இது போன்ற தகவல் எதையும் வெளியிடவில்லை. இது, முற்றிலும் தவறான பிரசாரம். எனவே, ஆஸ்திகர்கள் இதனை நம்ப வேண்டாம். நம் மடத்தின், www.sringeri.net அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் தகவல்களை மட்டும் கவனத்தில் கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.