அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், 17-ம் தேதி நடைபெறுவதாக இருந்த குழந்தை இராமர் சிலை ஊர்வலம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அன்றையதினம் தான், குழந்தை ராமர் சிலை கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்காக, பூஜைகள் வரும் 16-ம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த சூழலில், கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் குழந்தை இராமர் சிலையை, பொதுமக்கள் காணும் வகையில், 17-ம் தேதி அயோத்தி நகரில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த ஊர்வலம் தற்போது திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
அதாவது, கருவறையில் நிறுவப்படும் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது, அச்சிலையை தரிசனம் செய்வதற்காக அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள். குறிப்பாக, அயோத்தி நகருக்கு வெளியே உள்ள பக்தர்களும், பொதுமக்களும் அதிக அளவில் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால், பாதுகாப்புப் பிரச்சனை ஏற்படும் என்று அயோத்தி பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
இதையடுத்து, குழந்தை இராமர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது ரத்து செய்யப்படுவதாக இராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்திருக்கிறது. இதற்கு பதிலாக கோவிலுக்குள் வைக்கப்படும் மற்றொரு இராமர் சிலை ஊர்வலாக எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.