ஐபிஎல் தொடரிலும் உலகக் கோப்பையிலும் கேப்டன் பதவி கிடைக்காமல் போய்விடும் என பயந்து, தான் தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை இணையத்தில் ஹர்திக் பாண்டியா பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், ஐபிஎல் பற்றியே எல்லோருமே பேசத் தொடங்கியுள்ளனர். ஐபிஎல் டிரேட், ஐபிஎல் ஏலம் என்று நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்கது அணியை பலப்படுத்தும் வகையில் வீரர்களை தேர்வு செய்துள்ளனர்.
மேலும், கேப்டன்கள், பயிற்சியாளர்கள் என்று மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் முன்னோக்கி செல்ல ஒரே ஒரு வழி மட்டுமே என தலைப்பிட்டுள்ளார்.