அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு, ஹனுமன் படத்திற்காக விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ரூ.5 நன்கொடையாக வழங்கப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
இந்த கும்பாபிஷேக விழாவிற்கு இந்தியாவில் உள்ள சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என ஏராளமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஹனுமன் படக்குழுவினர் அயோத்தி ராமர் கோவிலுக்காக நன்கொடை வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளனர்.
இந்த படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்திற்காக விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ரூ.5 ராமர் கோவில் நன்கொடைக்காக வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளனர்.
ஹனுமன் படக்குழுவின் இந்த தாராள மனசுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. ஹனுமன் திரைப்படத்தை பிரசாந்த் வர்மா இயக்கி உள்ளார்.
இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா நாயகனாக நடித்துள்ளார். மேலும் அம்ரிதா ஐய்யர், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த விழாவில் ஹனுமன் படக்குழுவினர் அனைவரும் காலணி அணியாமல் கலந்துகொண்டனர். ஹனுமனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்கள் இவ்வாறு கலந்துகொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.