சோதனை நடத்த சென்ற போது அமலாக்கத்துறையினர் தாக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு மேற்கு வங்க அரசை மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் உணவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அப்போது ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்வதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஜோதிப்ரியா மல்லிக்கை கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பாங்கானில் உள்ள முன்னாள் நகராட்சி தலைவர் சங்கர் ஆதியா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். அப்போது அதிகாரிகள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து கொல்கத்தா விரைந்த அமலாக்கத்துறை இயக்குநர் (பொறுப்பு) ராகுல் நவீன் சம்வபம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் ஜாமீனில் வெளிவரக்கூடிய சாதாரண பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், எப்ஐஆர் நகல் வழங்கப்படவில்லை என்றும் அமலாக்கத்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே அமலாக்துறையினர் மீதான தாக்குதல் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மேற்குவங்க அரசை மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.