அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, ஜனவரி 22-ம் தேதி உத்தரப் பிரதேசத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. அன்றையதினம்தான் ஸ்ரீராமரின் குழந்தை சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது.
இந்த இராமர் கோவிலை உலகளவில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதில் மத்திய பா.ஜ.க. அரசு உறுதியாக இருக்கிறது. ஆகவே, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எளிதில் வரும் வகையில், அயோத்தியில் 1,450 கோடி ரூபாய் செலவில் புதிதாக சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டிருக்கிறது.
ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில், 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் விமான நிலைய முனையக் கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. இதன் முகப்பு அயோத்தி இராமர் கோவில் கட்டடக் கலையை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, பழைய இரயில்வே ஸ்டேஷன் 450 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரயில் நிலையத்துக்கு அயோத்தி தாம் இரயில் நிலையம் என்றும், விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என்றும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இது தவிர, அயோத்தி நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 11,600 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளும், உள்கட்டமைப்புகளும் சர்வதேசத் தரத்தில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட வேண்டும். மேலும், அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கிறார்.