புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா ஏவுகணைகளுடன் தயாரான நிலையில், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அச்சமடைந்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச முயன்றதாக தூதரக அதிகாரி பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சென்று கொண்டிருந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் வாகனத்தின் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பினராகும்.
இதையடுத்து, இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2019 பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம் மீது இந்தியா வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், அந்த முகாம் அழிக்கப்பட்டதோடு, ஜெய்ஷ் இ முகமது தீவரவாதிகள் 300 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கு பிறகு, மறுநாள் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால், இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தான் விமானங்களை விரட்டி அடித்ததோடு, ஒரு விமானத்தையும் சுட்டு வீழ்த்தியது. அப்போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தானிடம் சிக்கிக் கொண்டார்.
இதையடுத்து, அபிநந்தனை இந்தியா கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பாகிஸ்தான் அனுமதி வழங்கவில்லை. இதனால் இந்தியா கடுமையான பதிலடித் தாக்குதலுக்குத் தயாரானது. எல்லையில் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்தது. இதையறிந்த அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்திருக்கிறார்.
இதுகுறித்து தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் அஜய் பிசாரியா, “இந்தியாவில் இருந்து ஏவுகணைகள் பாகிஸ்தானை எந்நேரத்திலும் தாக்கலாம் என்கிற செய்தி, அந்நாட்டு இராணுவத்திடம் இருந்து அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் தெஹ்மினா ஜன்ஜுவாவுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இதுகுறித்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாட்டு தூதர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் ஜன்ஜுவா, அந்நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிடம் பேசவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அப்போது, ஒரு நாட்டுத் தலைவர், பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளரிடம், இந்தியாவிடம் நேரடியாகப் பேசும்படி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, நான் டெல்லியில் இருக்கும்போது அப்போதைய பாகிஸ்தான் உயர் அதிகாரி சோஹைல் மஹ்மூத் என்னை தொடர்பு கொண்டு, அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உடனடியாக உங்கள் நாட்டின் பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார் என்றார்.
இதற்கு, பிரதமர் மோடி தற்போது தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார். ஆகவே, முக்கியமான தகவல் என்றால் என்னிடம் தெரிவிக்கவும். நான் பிரதமர் மோடியிடம் தெரிவிக்கிறேன் என்றேன். அதன் பிறகு, எனக்கு போன் அழைப்பு வரவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், மறுநாள் அபிநந்தனை விடுதலை செய்வதாக இம்ரான் கான் ஊடகங்களிடம் அறிவித்தார். அப்போது, இது அமைதியான செயல்முறை என்று இம்ரான் கான் குறிப்பிட்டாலும், அது இந்தியாவின் கட்டாய ராஜதந்திரத்தின் விளைவு என்றும் அஜய் பிசாரியா சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இதை மெய்ப்பிக்கும் வகையில், 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய பிரதமர் மோடி, “அதிர்ஷ்டவசமாக விமானி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று பாகிஸ்தான் அறிவித்தது. இல்லையெனில் அன்று இரவு ரத்தக்களரி நடைபெற்றிருக்கும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.