தமிழ்நாடு முழுவதும் இன்று இரண்டாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை, இதனால், பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள முடியாமல், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
தமிழகத்தில் உள்ள 23 போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இணைந்து சமீபத்தில் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 23 தொழிற்சங்கத்தினர் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பொங்கலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த வேலைநிறுத்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை தமிழக அரசுக்கும் தொழிற்சங்கங்கள் இடையே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும், அதில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை.
தொழிலாளர் நல ஆணையம் விடுத்த அழைப்பின் அடிப்படையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சுமுக முடிவு எடுக்கப்படும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. இருப்பினும், அதில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக அறிவித்த தொழிற்சங்கத்தினர், தமிழக அரசு ஒரே ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்றத் தயாராக இல்லை என்றும் இன்று முதல் பேருந்துகள் ஸ்டிரைக் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தது.
இந்தப் போராட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ள நிலையில், அதிகாலை முதல் பேருந்து சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஊர்களில் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி உள்ளன. பல பகுதிகளிலும் வழக்கமான எண்ணிக்கை காட்டிலும் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சில இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேநேரம் சில இடங்களில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் உத்திரமேரூரில் மூன்று மணி நேரமாக பேருந்துகள் வராததால் ஆவேசமடைந்த பயணிகள் அரசு பேருந்து வழிமறித்து முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்திரமேரூரில் இருந்து புக்கத்துறை, செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம் மார்க்கமாக சென்னை செல்லும் அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள், சிகிச்சைக்காக செல்கின்ற நோயாளிகள் என பலரும் பேருந்து நிலையத்தில் காலை 4.30 மணியில் இருந்து 7.30 மணி வரை சுமார் 3 மணி நேரம் காத்திருந்தும் ஒரு பேருந்து கூட வராததால் ஆவேசமடைந்த பயணிகள் அரசு பேருந்து வழிமறித்து முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது.