பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலை சுற்றி உள்ள வீதிகளை வணிக பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
முருகனின் ஆறுப்படை வீடுகளில், மூன்றாம் படை வீடாக பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, திருவிழா மற்றும் விஷேச நாட்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிரிவலப்பாதையை வலம் வருவது வழக்கம். முக்கியமாக கார்த்திகை மாதம் தொடங்கி தைப்பூசம், பங்குனி உத்திரம் என ஆறு மாதக்காலம், கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டமாகவே இருக்கும். கிரிவலப்பாதை முழுவதும் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், கிரிவலப்பாதையில் பக்தர்கள் செல்வதற்கு கடும் சிரமமாக உள்ளது.
இதுதொடா்பாக ஏற்கெனவே தாக்கல் செய்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை ஏற்கெனவே, விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு முன் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தரப்பில், தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றிலும் பிளாஸ்டிக், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அரசு தரப்பில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடக்காதவாறு தொடர் கண்காணிப்பு செய்யப்படுகிறது. 300 கடைகளில் 160 கடைகள் அகற்றப்பட்டன. மற்றவை பட்டா நிலத்தில் உள்ளன. எனவே, சர்வே செய்து உரிய நடவடிக்கை எடுக்க அவகாசம் தேவை என்று தெரிவித்தது.
இதுகுறித்து பேசிய நீதிபதிகள், நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் இவ்விவகாரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க அரசு தரப்பு தவறிவிட்டது. இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய நிலை உருவாகும். பழனி நகராட்சி நிர்வாக அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதுபோல் தெரிகிறது.
இது ஆக்கிரமிப்பாளர்களை மறைமுகமாக ஊக்குவிப்பதுபோல் உள்ளது. நிரந்தர கட்டுமான ஆக்கிரமிப்புகளை சர்வே செய்து 10 நாட்களில் அகற்ற வேண்டும். கிரிவலப்பாதைகளில் வாகனங்களை நுழையவிடக் கூடாது. அப்பகுதியில், நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் சோதனைச் சாவடி, தற்காலிக தடுப்புகள் அமைக்க வேண்டும். மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். வணிக நடவடிக்கைகளை அனுமதிக்கக்கூடாது என்று கூறி வழக்கை ஜனவரி 23-க்கு ஒத்தி வைத்தனர்.