சிக்கிம் மாநிலத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தன்னை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், பா.ஜ.க. வேட்பாளர் டி.டி.லெப்சா போட்டியின்றி தோ்வாகி இருக்கிறார்.
சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்.), பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில், இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டப்பேரவைத் தொகுதிகளில் எஸ்.கே.எம். கட்சி 19 இடங்களிலும், பா.ஜ.க. 12 இடங்களிலும் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கின்றன.
இந்த சூழலில், கடந்த ஆட்சியில் சிக்கிமில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட சிக்கிம் ஜனநாயக முன்னணியின் (எஸ்.டி.எஃப்.) ஹிஷே லசுங்பாவின் பதவிக்காலம், அடுத்த மாதம் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மேற்கண்ட இடத்துக்கு ஜனவரி 19-ம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதில், பா.ஜ.க. சாா்பில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. டி.டி.லெப்சா வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு எஸ்.கே.எம். கட்சி ஆதரவு தெரிவித்தது. ஆகவே, வேட்புமனு தாக்கலின்போது, முதல்வர் பிரேம் சிங் தமாங், மாநில பா.ஜ.க. தலைவர் டி.ஆர்.தாபா ஆகியோர் உடனிருந்தனர்.
அதேசமயம், வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. ஆனால், டி.டி.லெப்சாவைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால், லெப்சா போட்டியின்றி வெற்றி பெறுவது உறுதியானது. இந்த சூழலில், அவரது வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதன் பிறகு, லெப்சா வெற்றி முறைப்படி அறிவிக்கப்பட்டது.