அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 22 -ம் தேதி நடைபெற உள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து வழிபாடு தளங்களிலும் உரிய முறையில் உழவாரப்பணி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 14 -ம் தேதி முதல் அனைத்து கோவில்களில் உட்புறம் பிரகாரம், சுற்றுப்புற சுவர்கள், தூண்கள் மற்றும் சிலைகளை உரிய முறையில் தூய்மைப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செயல்படுத்தப்பட்ட புகைப்படங்களை வாட்ஸ்-அப் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும் என புதுச்சேரி இந்து சமய நிறுவனங்களின் ஆணையர் சிவசங்கரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வரும் 22 -ம் தேதி அன்று நடைபெற உள்ள அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி பக்தர்கள் அனைவரும் காண காணொளி மூலமாக காண வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும்,
அன்றைய தினம் பகல் 12 மணி முதல் பிற்பகல் 2:30 வரை உச்சிக்கால பூஜை நடை சாத்தப்பட்டு, பின் பிரகாரம் மற்றும் உள் மண்டபங்களில் பொதுமக்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியைக் காண ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.