கோவையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 36 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவையில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், மாநகராட்சிப் பகுதியில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோவை மாநகராட்சி கிழக்கு, வடக்கு மண்டலங்களில் டெங்கு பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது.
டெங்கு பாதிப்பைக்கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 65 பேருக்கும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 36 பேருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, டெங்கு பாதிப்புக்கு காரணமான, கொசுப் புழுக்கள் உற்பத்தியாகாத வகையில் வீட்டைச் சுற்றி தேங்காய் சிரட்டை, டயர், பிளாஸ்டிக் பொருள்கள் போன்ற தண்ணீர் தேங்கும் பொருள்களை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக உள்ள தனியார் நிறுவனங்கள், வீடுகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.