கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரபலமான கோவில் எது என்றால் அது மருதமலைக் கோவில்தான். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலை முருகனின் 7 -ம் படைவீடு என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.
மருதமலைக்கு கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மருதமலையில் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தைப்பூச திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு தைப்பூச திருவிழா பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, திருவிழா தேதி மற்றும் நிகழ்ச்சி விவரங்களை திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மருதமலைக் கோவிலில் இந்தாண்டு தைப்பூச திருவிழா வரும் 19 -ம் தேதி காலை 7 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கி, 24 -ம் தேதி வரை நடைபெறுகிறது. அன்றைய தினம், காலை 9 மணி முதல் 10 மணி வரை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
25 -ம் தேதி காலை 7.30 மணிக்கு வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும், இதனைத் தொடர்ந்து, தைப்பூசம் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. 26 -ம் தேதி தெப்பத்திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தைப்பூச திருவிழா நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வர். இதனையொட்டி, சிறப்பு ஏற்பாடுகளைக் திருக்கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.