தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் ஆடுகளம் சரியில்லை என கிறிஸ் பிராட் தனது ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் இரண்டாவது போட்டி தென்னாப்பிரிக்காவில் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஒரே நாளில் 23 விக்கெட்கள் விழுந்தது. அடுத்த நாளில் 10 விக்கெட்கள் விழுந்து இரண்டே நாளில் இப்போட்டியானது முடிந்தது.
இதற்கு கேப்டவுன் பிட்ச் தான் காரணம் என்று வீரர்களே கூறியிருந்தனர். இந்நிலையில் இந்தப் போட்டியின் நடுவர் கிறிஸ் இந்த பிட்ச் குறித்து தனது ஆய்வை சமர்ப்பித்துள்ளார்.
அதில், ” நியூலேண்ட்ஸ் ஆடுகளத்தில் ‘பேட்’ செய்வது கடினமாக இருந்தது. போட்டி முழுவதும் பந்துகள் ஆபத்தான முறையில் படுவேகமாக ‘பவுன்ஸ்’ ஆகின. இதனால் பேட்டர்களால் ‘ஷாட்’ அடிக்க முடியவில்லை. சிலரது ‘கிளவ்சில்’ பந்துகள் பலமாக தாக்கின. பந்துகள் மோசமாக ‘பவுன்ஸ்’ ஆனதில் பல விக்கெட்டுகள் வீழ்ந்தன” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆடுகள கண்காணிப்பு குழு, கேப்டவுன் ஆடுகளத்தின் தரம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது. நியூலேண்ட்ஸ் மைதானத்துக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியை அபராதமாக விதித்துள்ளது.
இதனை எதிர்த்து 14 நாளில் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு ‘அப்பீல்’ செய்யலாம். 6 தகுதி இழப்பு புள்ளி பெறும் மைதானத்தில் ஒரு ஆண்டுக்கு சர்வதேச போட்டிகள் நடத்த தடை விதிக்கப்படும். 12 புள்ளியை எட்டினால், 2 ஆண்டாக தடை நீடிக்கப்படும்.