உலகமே இந்தியாவை ஸ்திரத்தன்மையின் முக்கியத் தூணாகப் பார்க்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் ‘வைபிரன்ட் குஜராத்’தின் 10-வது மாநாடு இன்று தொடங்கியது. “வைபிரன்ட் குஜராத்” 20 வருட வெற்றியின் மாநாடாக இது கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, இந்த “வைபிரன்ட் குஜராத்” மாநாடு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இம்மாநாடு 12-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில், 36 கூட்டாளர் நாடுகளும், 16 கூட்டாளர் அமைப்புகளும் கலந்துகொண்டிருக்கின்றன. இம்மாநாட்டை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து பேசுகையில், “சமீபத்தில்தான் இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தன.
இதையடுத்து, 100 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் நேரத்தில், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நாங்கள் கொண்டிருக்கிறோம். எனவே, அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா தனது இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறது.
இந்த 25 ஆண்டுகள் இந்தியாவின் அமிர்த காலமாகும். இந்த அமிர்த காலத்தில் குஜராத்தில் முதல் உலக உச்சி மாநாடு நடைபெறுகிறது. ஆகவே, இது இன்னும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான பங்காளிகள்.
இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் பங்கேற்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சி மாநாட்டில் ஷேக் முகமது பின் சயீத் தலைமை விருந்தினராக கலந்துகொள்வது இந்தியாவிற்கும் ஐக்கிய அரசு அமீரகத்துக்கும் இடையே இருக்கும் வலுவான உறவைக் குறிக்கிறது.
உலகமே இந்தியாவை ஸ்திரத்தன்மையின் முக்கியத் தூணாகப் பார்க்கிறது. நம்பக்கூடிய ஒரு நண்பர், மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட ஒரு பங்குதாரர், உலகளாவிய நன்மையை நம்பும் ஒரு குரல், உலகப் பொருளாதார வளர்ச்சியின் இயந்திரம், தீர்வுகளைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப மையம், திறமையான இளைஞர்களின் சக்தி மற்றும் ஜனநாயகத்தை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.
ஐக்கிய அரசு அமீரக நிறுவனங்களால் இந்தியாவின் துறைமுக உள்கட்டமைப்பில் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள புதிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. இன்று, இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா 11-வது இடத்தில் இருந்தது.
இன்று, அனைத்து முக்கிய ஏஜென்ஸிகளும் இந்தியா, வரும் ஆண்டுகளில் உலகின் முதல் 3 பொருளாதாரங்களில் இருக்கும் என்று மதிப்பிடுகின்றன. அது நடக்கும் என்று உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.