இந்திய வரலாற்றிலேயே மிகச் சிறந்த மற்றும் வெற்றிகரமான பிரதமர் மோடிதான் என்று ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் 10-வது “வைபிரன்ட் குஜராத்” உலக வர்த்தக மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், மாநாட்டின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ள குஜராத் உலக வர்த்தகக் கண்காட்சியையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இக்கண்காட்சியில் ஆஸ்திரேலியா, தென்கொரியா, தாய்லாந்து, வங்கதேசம், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், ஜெர்மனி, நார்வே, நெதர்லாந்து, ரஷ்யா, ஜப்பான், இந்தோனேஷியா, வியட்நாம் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் தங்களுடைய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் மற்றும் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி இருக்கின்றன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, “கடந்த 10 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது. இதில், 3-ல் 1 பங்கு குஜராத்தில்தான் செய்யப்பட்டிருக்கிறது.
சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், ஜாம்நகரில் 5,000 ஏக்கர் பரப்பளவில் ‘திருபாய் அம்பானி என்ர்ஜி கிகா காம்ப்ளக்ஸ்’ பெயரில் பசுமை ஆற்றல் எரிபொருள்கள் தயாரிக்கப்படும். இதன் மூலம் பசுமை ஆற்றலில் இந்தியாவை சிறந்து விளங்கச் செய்வோம். உலக அளவில் மிகச்சிறந்த தலைவராக மோடி பார்க்கப்படுவதால் குஜராத்தில் முதலீடு குவிகிறது. நமது பிரதமர் மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்.
நான் பெருமைமிகு குஜராத்தி. வெளிநாட்டினர் புதிய இந்தியாவைப் பற்றி நினைக்கும்போது புதிய குஜராத்தைப் பற்றியும் நினைப்பார்கள். எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது? நமது காலத்தின் தலைசிறந்த தலைவரும், இந்திய வரலாற்றில் மிகச் சிறந்த பிரதமருமான நரேந்திர மோடியால்தான்.
ரிலையன்ஸ் நிறுவனம் என்றுமே குஜராத் மாநிலத்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனமாகவே இருக்கும். குஜராத் உருமாற்றம் பெற முக்கிய காரணமாக இருந்தது பிரதமர் மோடி. இந்தியாவில் முதல்முறையாக ‘கார்பன் பைபர்’ வாயிலாக 5ஜி சேவையை ஹசிராவில் நிறுவ ரிலையன்ஸ் திட்டமிட்டிருக்கிறது. இதனால், 5ஜி மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்து பல வேலைவாய்ப்புகளின் மையமாக குஜராத் திகழும்” என்றார்.