2008 மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கருதப்பட்ட நிலையில், அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 78 ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருப்பதாக ஐ.நா. தெரிவித்திருக்கிறது.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 161 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
எனினும், இத்தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவன் பாகிஸ்தானின் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத். ஆகவே, ஹபீஸ் சயீத்தை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்தது. மேலும், அமெரிக்காவும், ஐ.நா.வும் அவனை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தன.
இந்த சூழலில், ஒரு வழக்கு விசாரணைக்காக, ஹபீஸ் சயீத்தை நாடு கடத்துமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. ஆனால், அவனை நாடு கடத்த பாகிஸ்தான் மறுத்து விட்டது. இதனிடையே, தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவி செய்த குற்றத்திற்காக ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவின் திருத்தப்பட்ட பட்டியலின்படி, 2020 பிப்ரவரி 12-ம் தேதி முதல் ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் அதிகாரிகளின் காவலில் உள்ளதாகவும், 7 தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த குற்றத்திற்காக, அவன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு 78 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இப்பட்டியலின் மாற்றங்களின் லஷ்கர் இ தொய்பாவின் நிறுவன உறுப்பினரும், சயீத் கூட்டாளியுமான ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவியின் மரணத்தையும் கமிட்டி சரி செய்திருக்கிறது. 2008 மும்பைத் தாக்குதலில் தீவிரவாதிகளை தயார்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய புத்தாவி, கடந்த ஆண்டு மே மாதம் சிறையில் இறந்தான். இவற்றுடன் சொத்து முடக்கம், பயணத் தடை மற்றும் ஆயுதக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட நபர்கள் மற்றும் வணிகங்களின் பட்டியலை பாதுகாப்பு கவுன்சில் குழு சமீபத்தில் புதுப்பித்திருகிறது.