கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பினாமியான கொங்கு மெஸ் மணி என்பவருக்குச் சொந்தமான உணவகம் மற்றும் அதன் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, பலருக்கும் வேலை வாங்கித் தருவதாக கூறி, பல கோடி ரூபாய் முறைகேடு செய்தார் என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, சட்ட விரோத பண மாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமாரின் வீடு, அலுவலகம், மற்றும் அவரது ஆதரவாளார்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான வீடுகள், தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் உள்ளிட்டோர் கடந்த மே மாதம் முதல் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், பல முக்கிய ஆவணங்கள் கிடைத்தன.
இந்த நிலையில், கரூரில் 10-ம் தேதி புதன்கிழமை மாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கொங்கு மெஸ் மணிக்கு சொந்தமான கோவை ரோட்டில் உள்ள உணவகத்திலும், கோடங்கிபட்டியில் உள்ள அவரது தோட்டத்திலும் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு சோதனை வருகின்றனர்.
இது தொடர்பாக விசாரித்தபோது, கோவையிலிருந்து இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் சென்றுள்ளனர். அதில், சொத்து மதிப்பீட்டுக் குழுவினர் 6 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும், கொங்கு மெஸ் மணிக்கு சொந்தமான உணவகம் மற்றும் அதன் அருகில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது வரை அவர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். வழக்கமாக, ரெய்டு என்றால், அதிகாலை 5 அல்லது 6 மணிக்கு சம்பந்தப்பட்ட நபர் வீடு அல்லது அலுவலகத்திற்கு சென்றுவிடுவர். ஆனால், தற்போது, மாலையில் சென்றுள்ளனர். இதனால்தான் பலரும் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நாளை மறுநாள், அதாவது ஜனவரி 12 -ம் தேதி, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ள நிலையில், இந்த சோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.