சர்வதேச வரைப்படத்தில் இந்தியாவை சரியான இடத்தில் வைத்திருக்கிறீர்கள். குஜராத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று பிரபல தொழிலதிபர் அதானி தெரிவித்திருக்கிறார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் “வைபிரன்ட் குஜராத் 2024”-ன் 10-வது உலக உச்சி மாநாடு இன்று தொடங்கியது. 12-ம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள்.
இம்மாநாட்டில், 36 கூட்டாளர் நாடுகளும், 16 கூட்டாளர் அமைப்புகளும் பங்கேற்றிருக்கின்றன. மேலும், மாநாட்டில் ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தோனேஷியா உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் தங்களுடைய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் மற்றும் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி இருக்கின்றன.
இந்த மாநாட்டில் அதானி நிறுவனங்களின் தலைவர் கௌதம் அதானி பேசுகையில், “பிரதமர் அவர்களே, நீங்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதுடன், அதனை செயல்படுத்தி வருகிறீர்கள்.
உங்களின் தலைமையின் கீழ், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடு என்ற வழியில் பயணித்து வருகிறது. சர்வதேச வரைபடத்தில், இந்தியாவை சரியான இடத்தில் வைத்திருக்கிறீர்கள். நாட்டை தன்னிறைவு பெற செய்திருக்கிறீர்கள்.
குஜராத்தில் 2025-ம் ஆண்டுக்குள் அதானி நிறுவனம் 55,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும். அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்” என்றார்.