கொள்ளைக் கூட்டக் கும்பலின் தலைவன் சிறையிலிருந்து தப்பிய நிலையில், லைவ் நிகழ்ச்சி ஒன்றின்போது ஆயுதமேந்திய கும்பல் தொலைக்காட்சி நிலையத்தில் அத்துமீறியது ஈக்வடார் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரம் உள்ள நாடு ஈக்வடார். இந்நாட்டில் பல்வேறு குற்றங்களை புரிந்ததற்காக, அடால்ஃபோ மேசியஸ் வில்லமார் எனும் கொள்ளைக் கூட்டத் தலைவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
ஃபிடோ என்று காவல்துறையால் அழைக்கப்படும் இவன், கோனெரோஸ் கும்பல் எனும் தொடர் குற்றங்களை புரிந்து வரும் ஒரு ஆயுதமேந்திய கொள்ளைக்காரக் குழுவின் தலைவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், ஃபிடோ சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டான். அவனை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. மேலும், இதன் காரணமாக, ஈக்வடார் நாட்டில் 60 நாட்கள் எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், அந்நாட்டின் குவாயாக்வில் பகுதியில் உள்ள தொலைக்காட்சி நிலையம் ஒன்று, லைவ் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அப்போது, ஆயுதம் தாங்கியபடி, முகமூடி அணிந்த கும்பல் ஒன்று அதிரடியாக உள்ளே நுழைந்து தொலைக்காட்சி நிலையத்தை கைப்பற்றியது.
இதனால், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அச்சத்தில் செய்வதறியாது திகைத்தனர். பின்னர், தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார், அக்கும்பலில் 13 பேரை கைது செய்தனர். மேலும், ஈக்வடார் அதிபர் டேனியல் நொபோவா, அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்பிட காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
இச்சம்பவத்தால் ஈக்வடார் நாட்டின் அருகே உள்ளெ பெரு தனது எல்லையை பலப்படுத்தி இருக்கிறது.