அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுத்துள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் ட்ரைலர் வெளியானது.
அறிமுக இயக்குனர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார்.
இந்த படத்தை தமிழ் பட இயக்குனர் பா. ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி, அருண் பாலாஜி, பாலாஜி பிரசாத், ராகவ், சஜி, தாமு, ஜெயச்சந்திரன், ஜெயப்பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கிரிக்கெட்டை மையப்படுத்தி 90 களில் நடக்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதில் கிரிக்கெட் விளையாடுவதற்காக 90களில் வாழ்ந்தவர்கள் பட்ட கஷ்டத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த ட்ரைலர் உள்ளது. மேலும் இதில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் காதலையும் இந்த ட்ரைலர் வெளிப்படுத்துகிறது.