லண்டன் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (ஜனவரி 10, 2024) இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமூகமாக இருந்தது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக ஜனவரி 08 அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றுள்ளார். அவருடன் பாதுகாப்புத் துறை, டி.ஆர்.டி.ஓ, முப்படைகளின் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் அடங்கிய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் உயர்மட்டக் குழுவும் சென்றுள்ளது.
இந்நிலையில் நேற்று, லண்டனில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்து பேசினார்.
இரு நாடுகளின் தலைவர்கள் வழிகாட்டுதல்படி, வரலாற்று உறவுகளை நவீன, பன்முக மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மையாக வடிவமைப்பதிலும், மறுவடிவமைப்பதிலும் இரு நாடுகளும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார்.
கூட்டுப் பயிற்சிகள், பயிற்சி, திறன் மேம்பாடு, அதிகரித்த பரஸ்பர செயல்பாடுகள், குறிப்பாக கடல்சார் துறையில் இருதரப்பு பாதுகாப்பு ஈடுபாடுகளில் சமீபத்திய அதிகரிப்பை ராஜ்நாத் சிங் நினைவு கூர்ந்தார்.
தொழில்நுட்பத் துறை உட்பட பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளை அவர் வலியுறுத்தினார். இங்கிலாந்து பாதுகாப்புத் துறையுடனான தனது நேர்மறையான தொடர்புகள் மற்றும் இருதரப்பு பாதுகாப்பு உறவில் புதிய நேர்மறை ஆற்றல் குறித்து ராஜ்நாத் சிங், ரிஷி சுனக்கிடம் விளக்கினார்.
அமைதியான மற்றும் நிலையான உலகளாவிய விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை வலுப்படுத்த இங்கிலாந்து மற்றும் பிற ஒருமித்த எண்ணம் கொண்ட நாடுகள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
21 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான தேசிய இலக்கை நோக்கி 1.4 பில்லியன் இந்தியர்களின் தேடலை பிரதமர் நரேந்திர மோடி வழிநடத்துகிறார் என்று ராஜ்நாத் சிங் மேலும் கூறினார்.
பிரதமர் மோடியின் முயற்சிகள் குறிப்பிடத்தக்க பலனைத் தந்துள்ளன, வளர்ச்சி நிலையான தன்மையில் உள்ளது. வறுமை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. வணிகத்தில் நட்புக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், விதி அடிப்படையிலான உலக ஒழுங்கை வலுப்படுத்த இங்கிலாந்து போன்ற நட்பு நாடுகளுடன் கூட்டுச் சேர இந்திய அரசு தயாராக உள்ளது.
வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இங்கிலாந்தும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து பாதுகாப்பு அமைச்சருடன் பிரதமர் சுனக் முழுமையாக உடன்பட்டார்.
குறிப்பாக, தற்போது நடைபெற்று வரும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (எஃப்.டி.ஏ) பேச்சுவார்த்தை விரைவில் ஒரு வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்திய சகாக்களுடன் வலுவான வணிக மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகளுக்கு இங்கிலாந்து அரசின் ஆதரவையும் அவர் உறுதி செய்தார்.
இந்தச் சந்திப்பின் போது, இங்கிலாந்து பிரதமருக்கு ஒரு ராம் தர்பார் சிலையை ராஜ்நாத் சிங் பரிசளித்தார். இதில் இங்கிலாந்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சர் டிம் பாரோவும் கலந்து கொண்டார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் லார்ட் டேவிட் கேமரூனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். பல்வேறு நிலைகளில் தீவிரமான ஈடுபாடுகளைக் கொண்ட இந்தியா-இங்கிலாந்து கூட்டாண்மையின் புதிய வேகத்தையும் திசையையும் அமைச்சர்கள் பாராட்டினர்.
பின்னர், லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸில் இந்திய சமூகத்தினருடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் கலந்துரையாடினார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் உலகப் போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பல இந்திய ராணுவ முன்னாள் படைவீரர்களும் இதில் கலந்து கொண்டனர்.