திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது. இதில், 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களே கவுன்சிலர்களாக உள்ளனர். இதில், ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும், மற்றொரு அணியினர் எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இதனால், திருநெல்வேலி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், அவ்வப்போது மேயரை மாற்றக்கோரி கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.
மேலும், உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை கடந்த மூன்று மாதங்களுக்கு சென்னையில் நேரில் சந்தித்த கவுன்சிலர்கள், புகார் தெரிவித்தனர். அப்போது, சமாதானம் செய்து வைத்து ஊருக்கு அனுப்பி வைத்தார் அமைச்சர் நேரு.
இருப்பினும், திமுக தலைமைக்கு புகார்கள் குவிந்தன. இதனால், மேயர் சரவணனிடம் மீதான புகார்களுக்கு திமுக தலைமை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. மேலும், அவரிடம் ராஜினாமா கடிதமும் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருநெல்வேலியில் மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மீது 12-ம் தேதி காலை 11 மணி அளவில் மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
இந்நிலையில், பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ அப்துல் வகாப் தலைமையில், பெரும்பான்மையான கவுன்சிலர்கள் வெளியூர் அழைத்து செல்லப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இரண்டு குழுக்களாக மற்ற கவுன்சிலர்களும் வெளியூர் பயணம் செல்கின்றனர். இதில், திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் அடக்கம். கவுன்சிலர்கள் மூன்று குழுக்களாக வெளியூர் அழைத்து செல்லப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஒரு தரப்பு தகவலை பரப்பி வருகின்றனர். மேலும், கவுன்சிலர்கள் கடத்தப்பட்டுள்ளதாக ஒரு குரூப் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதால், விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.